இந்திய சினிமாவில் ஜாம்பவான்களில் மூத்தவர் இளையராஜா. 80 வயதாகும் இசையமைப்பாளர் இளையராஜா, இப்போதும் 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி என்று 3 பிள்ளைகள் உள்ளனர். இளையராஜாவை போலவே மூவரும் இசைத்துறையில் இருக்கின்றனர்.
இளையராஜாவின் வாரிசாக யுவன் சங்கர் ராஜா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் தந்தைக்கு உதவியாக கார்த்திக் ராஜா உடன் பயணித்து வருகிறார். அதேபோல் மகள் பவதாரினி சிறுவயது முதலே இளையராஜாவுக்காக பாடல் பாடி வந்துள்ளார். அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
2000ஆம் ஆண்டு வெளியான பாரதி படத்தில் ”மயில் போல” பாடலுக்காக தேசிய விருது வென்றார். அதுமட்டுமல்லாமல் ராசய்யா, அலென்சாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதல், அழகி, பிரெண்ட்ஸ், ஒருநாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடி வந்தார்.
அதேபோல் இசையமைப்பாளராகவும் 10க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்காக இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி பவதாரிணி காலமானதாக தெரிய வந்துள்ளது.
இது இளையராஜா குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் விஜயகாந்த் காலமான நிலையில், தற்போது பவதாரிணி காலமாகியுள்ளது தமிழ் சினிமாவை உலுக்கியுள்ளது. இவரது உடல் நாளை இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.