நடிகர் அஜித் குமாரை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கி பிரம்மாண்ட ஹிட் கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். தற்போது பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவை வைத்து ”சேர்ஷா” படம் மூலம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தார். அதன்பின் இப்போது சல்மான் கானை வைத்து ”தி புல்” என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் விஷ்ணு வர்தன் எப்படி அஜித்தை சந்தித்தார், பில்லா படத்தை ஏன் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம் என்பது குறித்து ஓபனாக பேசி இருக்கிறார். அதில் பேசிய விஷ்ணு வர்தன், ஷாரூக் கான் நடித்த இந்தி படமான அசோகாவில் அஜித் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பணியாற்றிய பலரும் தமிழர்கள் என்பதால், அவருக்கு அந்த செட் மிகவும் நெருக்கமான ஒன்றாக அமைந்தது.
அப்போது தான் அஜித் குமார் துணை இயக்குநராக சந்தித்தேன். அதன்பின் இயக்குநரான போது பரம சிவன் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். அப்போது திடீரென அஜித் குமார் என்னிடம், உங்களின் படங்களை பார்க்கவில்லை. ஆனால் நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். அதனை சாதாரணமாக நினைத்தேன்.
ஆனால் உடனடியாக அஜித் குமார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர் என்னிடம் கதை இருக்கிறதா என்று கேட்டார். ஆனால் எனக்கு நடிகர்களுக்காக கதை எழுதும் பழக்கமில்லை. அந்த நேரத்தில் ரீமேக் படங்கள் சில வெளியாகி நல்ல ஹிட்டடித்தது. இந்தியில் ஷாரூக் கான் நடிப்பில் டான் வெளியாகியது. அதனால் தமிழில் அஜித் குமார் ரீமேக் செய்ய விரும்பினார்.
இதுகுறித்து பல்வேறு தரப்பிடம் பேசும் போது, ரஜினி சாரின் பில்லாவை ரீமேக் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் எங்களுக்கு அதனை சவாலாக எடுத்து படத்தை முடிக்க நினைத்தோம். அதன்பின் உடனடியாக ஒரு போட்டோஷூட் மட்டும் நடத்திவிட்டு, நேரடியாக மலேசியா சென்றுவிட்டு படப்பிடிப்பையே முடித்துவிட்டு திரும்பினோம்.
ஆனால் இங்குள்ளவர்கள் பில்லா ரீமேக்கை செய்ய கூடாது என்று எதிர்மறையாகவே பேசினார்கள். அப்போது திடீரென ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்று பார்த்தால், ரஜினிகாந்த் கட்டிப்பிடித்து பில்லா வேறு மாதிரி வந்துள்ளது. நானே வேண்டாம் என்று கூறினேன் தயாரிப்பாளரிடம், ஆனால் என்னை தவறு என்று நிரூபித்துவிட்டீர்கள் என்று பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.