விஜய் சேதுபதி, த்ரிஷா, கவுரி கிஷன், வர்ஷா பொல்லம்மா, திவ்யதர்ஷினி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 96. 2018ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
பள்ளி நாட்களில் காதலித்த 2 பேர், 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-யூனியனில் சந்திக்கும் போது நடக்கும் காட்சிகளே கதையாக அமைக்கப்பட்டது. ராம் வாழ்க்கையில் ஜானு ஏற்படுத்திய தாக்கமும், ராம் எந்த அளவிற்கு காதலித்தேன் என்பதை ஜானுவுக்கு தெரியப்படுத்துவதே திரைக்கதையாக அமைக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் வரும் லைஃப் ஆஃப் ராம் மற்றும் காதலே காதலே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன. வெறும் உரையாடலை மட்டும் வைத்து இப்படியொரு படத்தை எடுக்க முடியுமா என்று பலரும் வியந்தனர். எல்லா படங்களிலும் பேசிக் கொண்டே இருக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் பேசாமலேயே மிரட்டினார்.
இருப்பினும் ராம் – ஜானு இருவரும் முத்தம் கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் படம் வெளியான போது விவாதித்தனர். இதுகுறித்து அண்மையில் விஜய் சேதுபதி பேசும் போது, 96 திரைப்படத்தில் பெரிதாக கதை என்ற ஒன்று கிடையாது. ”நான் உன் கல்யாணத்திற்கு வந்தேன் ஜானு” என்று ராம் சொன்ன பின் அந்த கதை முடிந்துவிட்டது.
ராம் தனது காதலை ஜானுவிடம் முழுமையாக அந்த காட்சியிலேயே வெளிப்படுத்திவிட்டான். அதன்பின் கடைசியில் ஒரு வாழ்வை போலவே படத்தை அணுகினேன். அனைவரும் எதிர்பார்த்ததை போல் எனக்கும் த்ரிஷாவிற்கும் முத்தக் காட்சி கடைசியில் இருந்தது. எழுதும் போது அப்படிதான் எழுதியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு நடந்த 10 நாட்களிலேயே வேறு மாதிரி யோசிக்க தொடங்கிவிட்டோம்.
அது ஒரு வாழ்க்கையை பற்றி பேசியதால், வேண்டாம் என்று முடிவு செய்தோம். அதேபோல் ரீ-யூனியனில் சந்திக்கும் பலருக்கும் வேறு மாதிரியான ஒரு எண்ணத்தை கொடுத்துவிடக் கூடாது என்று யோசித்து முத்தக் காட்சியை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.