இயக்குநர் பா.இரஞ்சித் – நடிகர் விக்ரம் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட அதன் சுற்று வட்டாரங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. சுமார் 118 நாட்கள் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து ஜனவரி 26ல் ரிலீஸ் என்று கூறி, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டது. கேஜிஎஃப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்தையும், அங்கு தமிழ் மக்களின் போராட்டத்தையும் இணைத்து படம் உருவாகியது தெரிய வந்தது. தங்கத்தை தேடும் படலத்தில் இறுதியில் என்ன நடக்கிறது என்பதை பா.இரஞ்சித் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார்.
நடிகர் விக்ரமிற்கு இந்த படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிஜி பணிகள் அதிகமென்பதால், படத்தின் தொடக்கத்திலேயே அதிக செலவாகும் என்பதை இயக்குநர் பா.இரஞ்சித் கூறியுள்ளார். அதற்கேற்ப சிஜி பணிகள் அதிக பொருட்செலவுடன் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் ஜூன் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இன்னும் 5 மாதங்கள் மீதமிருக்கும் சூழலில், இயக்குநர் பா.இரஞ்சித் அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்முறை நேரடி அரசியல் படத்தை எடுக்க பா.இரஞ்சித் முடிவெடுத்துள்ளார். மல்டி ஸ்டார்களை கொண்ட படமாக இதனை எடுக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதற்காக சில நடிகர்களை அணுகியுள்ளதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. இந்த படத்திற்கு பின்னரே சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முடிவு செய்துள்ளார்.