மாவீரன், அயலான் படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். சோனி நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் சாய் பல்லவி, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி உயிரிழந்த மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ராணுவ வீரரான சிவகார்த்திகேயன் மிடுக்குடன் அதிக சத்தத்துடன் பேசிய காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இருந்தாலும் ராஷ்ட்ரியா ரைஃபல்ஸ் என்ற வார்த்தை ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இஸ்லாமியர்கள் பலரும் அமரன் படத்தை வெளியிடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சென்றுள்ளார்.
அமரன் படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமரன் படத்தின் ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் படத்தினை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ.60 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இதனால் விஜய் சினிமாவை விட்டு விலகிய பின், அவரது இடத்தை சிவகார்த்திகேயன் நிச்சயம் நிரப்புவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் சிவகார்த்திகேயன் படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.