தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையையொட்டி அயலான், கேப்டன் மில்லர், மிஷன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்களுக்கு பின் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அதுமட்டுமல்லாமல் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட தங்கலான், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களும் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டன.
இதனிடையே தேர்தல் தேதி மற்றும் ஐபிஎல் தொடர் தொடங்கியதால், பெரிய படங்கள் எதுவுமே ரிலீஸாகவில்லை. இதன் காரணமாக மலையாள படங்களான மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம், ஆடுஜீவிதம் உள்ளிட்டவை தமிழ்நாட்டிலும் பெரியளவில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிபெற்றன. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு வர ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்த பின் பெரிய படங்கள் அனைத்தும் ஜூன் மாதத்தில் இருந்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் தயாராகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களில் இந்தியன் 2 படத்தை ஜூன் 14ல் ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரின் 50வது படமான ராயன் படம் ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்த பின் ராயன் படத்தின் விளம்பர பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஜூன் கடைசி வாரத்தில் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தை ரிலீஸ் செய்ய ஞானவேல்ராஜா திட்டமிட்டுள்ளார். இதனால் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜூன் மாதம் முதலே அடுத்தடுத்து பெரிய படங்கள் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.