ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர்களில் ஒருவராக மாறினார் அட்லீ. இதனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜயை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பாலிவுட் சென்றார். சினிமாவில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த ஷாரூக் கான், அடுத்தடுத்து மிரட்டல் ஹிட் கொடுப்பதற்காக பதான், ஜவான் படங்களில் நடிக்க தொடங்கினார்.
தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படம் வெளியான உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாலிவுட் சினிமா மீண்டும் உயிர்பெற்றது. பதான் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் ஷாரூக் கான் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் வேகமாக பணியாற்றி வருகிறார். ஜவான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியது. ஜவான் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பதான் பட ரிலீஸ்-க்காக விளம்பர பணிகளில் ஷாரூக் கான் தீவிரமாக பணியாற்றி வந்தார். அதேபோல் அட்லீயும் தனது குழந்தை பிறப்புக்காக சென்னையில் தங்கியிருந்தார். தற்போது அட்லீ குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியிலும், ஷாரூக் கான் பதான் வெற்றி உற்சாகத்தில் அடுத்தடுத்து படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே படத்தின் 75 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாகா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜவான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ஷாரூக் கான் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு நிற டீ-ஷர்ட் அணிந்து அட்லீ மற்றும் ஷாரூக் கான் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.