அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயம் நெல்சனுக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல ரஜினியின் அண்மைகால படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் வகையில் அமையாத நிலையில், ஜெயிலர் படத்தை ரஜினி அதிகமாக நம்பியுள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக இயக்க்லுநர் நெல்சன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது.
இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பில் மீதமுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் ஜெயிலர் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து ரிலீஸ் பணிகள் செய்ய உள்ளதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.அதேபோல், ஜெயிலர் படத்தை முடித்துக் கொடுத்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் ரஜினி இணைகிறார். லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமியராக நடிக்கவுள்ளதாகவும், அதற்காக நீண்ட தாடி வளர்க்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லால் சலாம் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை முடித்த பின், ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகள் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளார்.