மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வாழை எனும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கும் நான்காவது படமான இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருப்பினும் படம் சிறுவர்களை மையப்படுத்தி உருவாக உள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படம், தியேட்டரில் ரிலீசாகாமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதனை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. கூடவே ஜி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இது குறித்து பேசியுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷுடன் நான் இணையும் படம் என் கரியரில் மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும். வரலாற்று படம் அது. அதனால்தான் இத்தனை நாள் காத்திருக்கிறோம். இந்தப் படம் இருவரின் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும். என்னிடம் இருக்கும் கதைகளை இயக்குவதற்கே 10 படங்கள் தேவை. நாவலைத் தொட வேண்டும் என்றால், அதற்கு முன் நான் என்னிடம் இருக்கும் கதைகளை வைத்து 10 படங்களை இயக்க வேண்டும். அப்படியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறோம். நாவலைப் நாடி போக வேண்டிய தேவை இப்போது இல்லை எனக் கூறினார்.