நயன்தாரா நடிப்பில் வெளியாகிய அறம் திரைப்படத்தை இயக்கியவர் கோபி நயினார். அறம் திரைப்படம் நயன்தாரா சினிமா கரியரில் முக்கிய படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு பின், நயன்தாரா அதிகளவில் சோலோ நாயகியாக நடிக்க தொடங்கினார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழும் குழந்தையை காப்பாற்ற முயலும் அரசு நிர்வாகத்தின் செயல்களை விமர்சித்து எடுக்கப்பட்ட திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
இருப்பினும் கோபி நயினாருக்கு அடுத்தப் படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் நயன்தாராவை வைத்து அறம் – 2 திரைப்படத்தை இயக்க தயாராகி வந்தார். இதனிடையே நடிகை ஆண்ட்ரியாவை வைத்து மனுஷி என்ற திரைப்படத்தை தொடங்கினார். அதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதுவும் அறம் படத்தை போல் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இதனால் ஆண்ட்ரியாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அறம் கோபி நயினார் அடுத்ததாக ராதிகாவை முதன்மை கதாபாத்திரமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனியர் நடிகை என்றாலும் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் ராதிகா, மீண்டும் கதாநாயகியாக நடிக்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் கர்ணன், சண்டக்கோழி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனுஷி திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின் ராதிகா நடிக்கும் படத்தை இயக்குநர் கோபி நயினார் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.