நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துணிவு படத்திற்கு பின்னர் அஜித் நடிக்கும் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆரம்பத்தில் இந்தப்படத்தை விக்னேஷ் இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் இந்த முடிவு பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்தநிலையில், மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அஜித்தின் பிறந்தநாளன்று விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஆனால், இப்படத்தின் பணிகள் தொடங்காமல் இருப்பதால் படம் கைவிடப்படுமா? என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது. ஆனால் படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்க உள்ளதாகவும், வில்லன் கதாபாத்திற்கு அவரை தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்தவர் அர்ஜூன் தாஸ். தனது மாஸான தோற்றத்தாலும், மிரட்டலான குரலாலும் ரசிகர்களை ஈர்த்தவர் அர்ஜூன் தாஸ். அதனால்தான் விடாமுயற்சி படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோன்று, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு லண்டனில் முதற்கட்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இம்மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.