பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனது முதல் படத்திலேயே முக்கிய இயக்குனர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்த அந்த திரைப்படம் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒவ்வொரு காட்சிகளும் விவரித்து சாட்டையடி கொடுத்தது.
பா ரஞ்சித் இயக்கிய இந்த திரைப்படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரானார் மாரி செல்வராஜ். முதல் படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் உடன் இணைந்த அவர், கர்ணன் படத்தை இயக்கினார். 1990களின் காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம், பொடியன்குளம் எனும் கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதையும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் தனக்கே உண்டான காட்சி அமைப்பின் மூலம் விவரித்தார் மாரி செல்வராஜ்.
இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவுடன் அவர் இணைவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதியுடன் அவர் கைகோர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மாமன்னன் என பெயர் சூட்டப்பட்டது.
சேலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலரும் கவனிக்க வைத்தது. படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் ராம சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உதயநிதி ஸ்டாலினை வைத்து 2018 ஆம் ஆண்டு ஏஞ்சல் என்ற படத்தை தயாரித்ததாகவும், அதன் எண்பது சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள நாட்களில் நடிக்காமல் உதயநிதி புறக்கணித்து வருவதாகவும், இந்த சமயத்தில் மாமன்னன் படம் வெளியானால் தனது ஏஞ்சல் படம் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக 25 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ள அவர், மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாமன்னனுக்கு எதிரான வழக்கினால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.