மாமன்னன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மாரி செல்வராஜின் மாமன்னன்
பரியேறும் பெருமாள் கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமூக வரவேற்பை பெற்றது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா
சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாமன்னன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், மாமன்னன் திரைப்படத்தை தான் ஏற்கனவே பார்த்து விட்டதாக கூறி மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏ ஆர் ரகுமான் இசையில் வடிவேலு பாடிய காட்சிகளும், பிரபலங்களின் பேச்சுகளும் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவை பிரபலப்படுத்தியது.
தேவர் மகன் பட விவகாரம்
விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தேவர் மகன் திரைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடித்திருந்த இசக்கி கதாபாத்திரம் மாமன்னன் ஆகினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படம் என்று கூறியிருந்தார். தேவர்மகன் படத்தை பார்க்கும்போது தனக்கு ஏற்பட்ட வலியை கடக்க முடியாமல் தவித்ததாகவும், ஒரு சினிமா சமூகத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை உணர்த்தி படம் தான் தேவர்மகன் என்றும் பேசி இருந்தார். பெரிய தேவர் சின்ன தேவர் இடம் பெற்றிருந்த அந்த படத்தில் தனது தந்தை நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தான் பலமுறை சிந்தித்தது ஆகவும் அவர் கூறியிருந்தார். படம் வெளியான நேரத்தில் நடந்ததெல்லாம் ரத்தமும் சதையும் இருந்ததாக வேதனைப்பட அவர் கூறினார். மாரி செல்வராஜின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அவருக்கு கமல் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
மாரி செல்வராஜ் விளக்கம்
இந்நிலையில் தேவர் மகன் படம் விவகாரம் குறித்து தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், மாமன்னன் திரைப்படத்தை கமல்ஹாசன் பார்த்து விட்டதாகவும், அப்போது தான் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டேன் என்பது அவருக்கு தெரியும் என்றும் கூறினார். படத்தைப் பார்த்துவிட்டு அவர் என்னை பாராட்டியது தான் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை என்றும் மாரி செல்வராஜ் குறிப்பிட்டார்.
தன் முன்னால் அவர் அமர்ந்திருந்தபோது, தனக்குள் இருக்கும் விஷயத்தை அன்று பேசவில்லை என்றால் என்று பேசுவது என்பதை தான் உணர்ந்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார். கலைக்கு நெருக்கமானவரிடம் தான் இதனை தான் கூறியதாகவும், அவரும் எனக்கு ஆதரவாக பேசி விட்டு சென்றார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தந்தையை புரிந்து கொள்ளாமல் கோபித்து சென்ற மகன், மீண்டும் தந்தையிடம் பேசிய ஒரு தருணமாகத்தான் அதைத்தான் பார்ப்பதாகவும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.