இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி கூட்டணியில் உருவான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து வெற்றி படத்தை கொடுத்தே தீர வேண்டும் என உறுதியுடன் இருந்த நடிகர் ரஜினிகாந்த், டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் உடன் கைகோர்த்தார்.
அந்த சமயத்தில் விஜய் நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்தது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் நெல்சன் உடன் ரஜினி கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி இருந்தது.
ஆனால் அனைத்து வதந்திகளையும் அனைத்து நொறுக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் உடன் இணைவதில் உறுதியாக இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டது.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ஜெயிலரில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஜராஃப், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் தமன்னா, காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சமீபத்தில் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. காவாலயா என தொடங்கும் அந்த பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, தமன்னாவின் நடன அசைவுகளுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. தற்போது காவாலையா பாடலை பல்வேறு நடிகைகளும் நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து ஜெயில் படத்தில் இருந்து இரண்டாம் பாடலான டைகர்கா ஹுக்கும் பாடல் வெளியாகி வைரல் ஆனது.
ஹுக்கும் பாடலில் இடம் பெற்ற உன் அலும்ப பாத்தவன், உங்க அப்பன் விசில்ல கேட்டவன், அலப்பறை கிளப்புகிறோம், தலைவரு நிரந்தரம் போன்ற வரிகள் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
தொடர்ந்து பாடகி தீ குரலில் ஜூஜூபி பாடலும் வெளியாகி தாளம் போட வைக்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடுகிறதாம். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.