நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், திடீரென இன்று காலை மறைந்தார். இதுகுறித்து மியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், உடல் சுழற்சி காரணமாக கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவு காரணமாக தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்த் வீடு மற்றும் தேமுதிக கட்சி அலுவலகம் முன் கண்ணீருடன் குவிந்து வருகின்றனர். அதேபோல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் உள்ள கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
சிறு வயதில் விஜயராஜ் என்ற பெயருடன் இருந்தவர் 1978ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநர் காஜா, விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என்று மாற்றினார். தமிழ் சினிமாவில் அதிகளவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்த பெருமை விஜயகாந்திற்கு உள்ளது.
ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்து ரிலீஸ் செய்த நடிகர் விஜயகாந்த். 1983ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் மட்டும் 18 படங்கள் ரிலீஸாகியது. கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்த விஜயகாந்த், 2005ஆம் ஆண்டு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால் அச்சத்தில் அரசியல் பேசவே யோசித்து வந்த நிலையில், விஜயகாந்த் எந்த அச்சமும் இன்றி அவர்களை எதிர்த்து அரசியலில் இறங்கினார். அதுமட்டுமல்லாமல் 2011ஆம் ஆண்டு 29 தொகுதிகளில் வெற்றிபெற்று, கருணாநிதி இருக்கும் போதே எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். அவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.