எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் நடிகர் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சூர்யா, பாபி டியோல், திஷா படானி, நட்டி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது.
மும்பை, கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக படமாக்கப்பட்டன. குறிப்பாக கொடைக்கானலில் போர் தொடர்பான காட்சிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாவீரன் படத்தை போல் பீரியட் காட்சிகள் அதிகமாகவும், தற்போதைய வாழ்வில் நடக்கும் காட்சிகள் குறைவாகவும் படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் சூர்யா போர் வீரனாக நடித்து வருகிறார். இதற்காக வித்தியாசமான லுக்கில் பெரிய உடற்கட்டுடன் சூர்யா இருந்து வந்தார். இதனிடையே சென்னையில் அமைக்கப்பட்ட செட்டில் பாலிவுட் நடிகரான பாபி டியோல் மற்றும் அவரின் குழுவினர் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சூர்யா – பாபு டியோல் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த நிலையில் கங்குவா படத்தில் சூர்யா தொடர்புடைய காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஓராண்டாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். கங்குவா படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் 38 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. ஜனவரி இறுதியில் கங்குவா படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ள நிலையில், அதன்பின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.