பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என்று அடுத்தடுத்த படங்களில் சமூக நீதி அரசியலை மையமான வைத்து உருவாக்கி வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது சொந்த தயாரிப்பில் ”வாழை” என்ற படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை மாரி செல்வராஜ் ஏற்கனவே முடித்துவிட்டார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்னொரு பக்கம் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களின் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ள ரஜினிகாந்த், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தின் வேகமாக நடித்து வருகிறார். ஜனவரி கடைசி வாரத்தில் இதன் படப்பிடிப்பு முடிய உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின் சில வாரங்கள் ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், மார்க் மாதத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பல்வேறு இயக்குநர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டு வந்தார். அதன் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வந்தது.
லிங்குசாமி, மாரி செல்வராஜ், நெல்சன் உள்ளிட்டோருடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மீண்டும் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்திலும் நடிகக் ரஜினிகாந்த் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் அவரின் நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டின. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதால் மீண்டும் கிராமத்து கதைக்களத்தில் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே பேச தொடங்கியுள்ளனர்.