தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸான நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றது. கலாய்ப்பதற்காக கூட ரசிகர்கள் யாரும் ஜப்பான் படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்லவில்லை. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இந்த படம், முழுமையாக ரூ.20 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை.
இதனால் நடிகர் கார்த்தி விரைவாக அடுத்த படத்தை முடித்து பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏற்கனவே சூது கவ்வும் புகழ் இயக்குநர் நலன் குமாராசாமி இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி, த்ரிஷாவை வைத்து 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் அடுத்த படத்தின் ஷூட்டிங்கையும் கார்த்தி தொடங்கியுள்ளார்.
சூர்யா மற்றும் ஜோதியாவின் 2டி நிறுவனம் சார்பாக இந்த படம் தயாரிக்கப்படுகிறது. ஜப்பான் படம் ரிலீஸான அடுத்த நாளிலேயே படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கும்பகோணத்தில் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கும்பகோணத்தில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிரேம் குமார் இயக்கும் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமுள்ளதாகவும், அதேபோல் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பதை படக்குழு மறைமுகமாக வைத்துள்ளது. ஆனால் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை தயாரிப்பாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.