அ.வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த திரைப்படம் தீரன்: அதிகாரம் ஒன்று. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், சத்யன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படத்தில் வடமாநில கொள்ளையர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெறும் கைரேகையை மட்டும் எடுத்து கொண்டு எப்படி கொள்ளையர்களை கண்டுபிடித்தார் கார்த்தி என்பதே கதையாக இருந்தது.
இடைவேளை காட்சியை ஒட்டி முழுக்க முழுக்க விறுவிறுப்பான கதையாக படமாக்கப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தில் உள்ளிட்ட மொழிகளிலும் தீரன் படம் பிரபலமானது. இந்த படம் வசூல் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. இதன்பின் அ.வினோத் அஜித் குமாருடன் இணைந்து 3 படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.
தற்போது அ,வினோத் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தயாராக உள்ள நிலையில், கமல்ஹாசன் இந்தியன் 3 மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார். இதனால் அ.வினோத் இதனிடையே ஒரு படத்தை இயக்கிவிட்டு அடுத்ததாக கமல்ஹாசன் படத்தை இயக்க போவதாக கூறப்பட்டது.
இதனால் மீண்டும் தீரன் கதையை கையில் எடுத்துள்ளார். இதுதொடர்பான ஒன் லைனை கார்த்தியிடம் கூறிய அ.வினோத் உடனடியாக திரைக்கதையாக்கும் பணிகளை தொடங்கினார். தற்போது கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அ.வினோத் – ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஏற்கனவே கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அடுத்தடுத்த படங்களை ஹிட் செய்ய தீவிரமாக உள்ளார். ஏற்கனவே நலன் குமாரசாமி படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 96 பிரேம் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன்பின் தீரன் அதிகாரம் 2 பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.