இயக்குநர் விக்னேஷ் சிவன் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் தன்னுடைய முதல் படமான போடா போடியை ரிலீஸ் செய்தார். அந்தப் பிரச்சனை அவருடைய இரண்டாவது படத்துக்கும் தொடர்ந்தது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். ஆனால் முதலில் அவருக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகுமா என்ற சந்தேகத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் பல கதாநாயகர்களிடம் கதை சொல்லியுள்ளார் விக்னேஷ்.
ஹீரோ காதாப்பாத்திரம் மட்டுமின்றி ஹீரோயின் கதாப்பாத்திரங்களில் நடிக்கக் கூட யாரும் முன் வரவில்லையாம். யாருக்கும் தன் கதை புரியவில்லையோ என்று சமீபத்தில் விக்னேஷ் கூறியிருந்தார். பல நடிகர்களிடம் கதை சொல்லியிருந்தாலும், இசையமைப்பாளராக அனிருத்தை மட்டுமே மனதில் வைத்திருந்தார் விக்னேஷ். ஒரு கட்டத்தில் யாரும் நடிக்க வரவில்லை என்றதும் அனிருத்தையே ஹீரோவாக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்து அவரிடமும் கேட்டுள்ளார். அனிருத்தும் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் செய்திகள் அப்போது ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்ட போது, அனிருத்திற்கு விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவான கத்தி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் நடிப்பா அல்லது இசையா என குழப்பத்தில் இருந்த அனிருத், கடைசியில் தனது அசுரபலமான இசையமைப்பையே கையில் எடுத்ததாக அப்போது பேசப்பட்டது. இதன் பின்னர்தான் அனிருத் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன.
இதனிடையே பல ஹீரோக்களிடம் சுற்றித் திரிந்த கதையில் அவ்வப்போது பல மாற்றங்களையும் செய்து கொண்டே இருந்துள்ளார் விக்னேஷ். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் மீண்டும் விஜய் சேதுபதியிடம் கதை சொல்லியுள்ளார். இரண்டாம் முறை கேட்டதும் அவருக்கு கதை பிடித்துப் போய் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
அனிருத் நடிக்காததால் தான் இன்று விக்ரம் வரை உயர்ந்திருக்கிறார். இன்னொரு பக்கம் நயன்தாரா அந்தப் படத்தில் நடித்ததால்தான் இன்று விக்னேஷ் சிவன் கரத்தை பிடித்திருக்கிறார். விஜய் சேதுபதி டேட்ஸ் கிடைத்தவுடன், தனுஷ் அந்தப் படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார். நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்று அவர் கூற, விஜய் சேதுபதி உடல் எடையையெல்லாம் குறைத்து நடித்தது குறிப்பிடத்தக்கது. எந்த ஹீரோயினும் ரசித்துக் கூட கேட்காத நானும் ரவுடிதான் கதையை நயன்தாரா மட்டும் விழுந்து விழுந்து சிரித்தபடி கேட்டதாக விக்னேஷ் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.