இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ஜூன் தாஸ். அதேபோல் துருவ நட்சத்திரம் படத்தில் வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்து பலரையும் வியக்க வைத்தவர். இதனால் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகரிக்க, தற்போது ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அண்மையில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியாகிய அநீதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சொமேட்டோ டெலிவரி பாயாக வரும் அர்ஜூன் தாஸ், நடிப்பில் அசத்திவிட்டதாக பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இதனால் உற்சாகமடைந்த அர்ஜூன் தாஸ் அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை மெளன குரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாந்தகுமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகம் ஆச்சரியமடைந்துள்ளது. குறுகிய காலத்திலேயே சிறந்த இயக்குநர்களுடன் அர்ஜூன் தாஸ் பணியாற்றி வருவதாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சாந்தகுமார் – அர்ஜூன் தாஸ் கூட்டணியில் உருவாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிவுள்ளது. அந்த போஸ்டர் வந்த பின் படம் குறித்த முக்கியமான தகவல்கள் தெரிய வரும். ஆனால் ஃபர்ஸ்ட் லுக் முன், ப்ரீ லுக் போஸ்டரிலேயே அதிக தாடி மற்றும் முடியும் உள்ள அர்ஜூன் தாஸ் மிரட்டலாக இருக்கிறார்.
இதனால் இந்தப் படமும் பெரிய ஹிட்டடிக்கும் என்று இப்போதே ரசிகர்கள் கமெண்ட் அடிக்க தொடங்கிவிட்டனர். அடுத்தடுத்த படங்களில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்து வருவதால், இனிமேல் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடிக்க மாட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.