சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், மாவீரன் படத்தை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ள நிலையில் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஹிட் அடித்த மாவீரன்
பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், தேசிய விருது பெற்ற மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்தார். மாவீரன் என பெயரிடப்பட்ட இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நேற்று வெளியானது.
கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் தன் மக்களுக்காக துணிந்து செயல்படும் ஒரு வீரனாக மாறுவதே கதைக்களம். அரசின் ஆணைப்படி குப்பதில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் அங்கு பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
முதல் நாளிலேயே வசூல் சாதனை
அனைத்து சிக்கல்களையும் பொறுத்துக்கொண்டு வாழும் கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியும் செய்கிறார். அப்போது திடீரென அவருக்கு கிடைக்கும் சூப்பர் பவரை வைத்துக் கொண்டு மக்களுக்காக போராடி மிஷ்கினின் கோபத்திற்கு ஆளாகிறார். அதில் இருந்து மீண்டு தன் சிக்கல்களை அவர் தீர்க்கிறாரா இல்லையா என்பது தான் படம்.
படத்தின் முதல் பாதி யோகி பாபுவின் ஒன்லின் காமெடியால் தரமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி படு சீரியஸாக போவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் படம் அனைத்து தரப்பிலான மக்களுக்கும் பிடித்திருப்பதால் மாவீரனின் வெற்றி உறுதியாகி உள்ளது. சுமார் 35 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நேற்று மட்டும் 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ரசிகர்களிடம் வாங்கி கட்டிய ப்ளூ சட்டை மாறன்
இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படமான stranger than fiction-ன் காப்பி என்று சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் அவர், பக்கத்தில் stranger than fiction என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் ஒன்லைன் கதையைப் பதிவிட்டுள்ளார். இது மாவீரன் கதையை போல் இருப்பதால், இவர் அந்தப் படத்தை தான் குறிப்பிட்டு ட்வீட் செய்து இருப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
படத்தின் கிளைமாக்ஸிற்கு பிறகு இயக்குனர் மடோன் அஸ்வின், மாவீரன் கதையை தான் எங்கிருந்து எடுத்திருப்பதாக கூறி அதன் பட்டியலை வெளியிட்டு இருப்பதாகவும், இந்த திரைப்படங்கள் மூலம் தான் இன்ஸ்பயர் ஆகி மாவீரனை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருப்பதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி இருக்க ப்ளூ சட்டை மாறன் வம்பு இழுக்கும்படியாக இந்த பதிவை இட்டுள்ளதாகவும், உலக சினிமாவை மட்டும் நொட்டும் அவர் கொஞ்சம் நல்ல சினிமாவையும் இயக்கலாம் என்றும் ஆலோசனை கூறி வருகின்றனர்.