இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதாக முடிவானது. இதற்கு பலதரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இலங்கையில் ஈழப்படுகொலையை நடத்திய ராஜபக்சே அரசுக்கு ஆதரவானவர் முரளிதரன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால், நாம் தமிழர் கட்சியினரும், தமிழ் தேசியம் பேசுகிறவர்களும், சில வெளிநாடுவாழ் இலங்கை தமிழர்களும் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழினத்துரோகி முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கண்டன குரல்கள் எழுந்தன. பலகட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர்தான் படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். விஜய் சேதுபதி இல்லாமல் படத்தை முன்னகர்த்த விருப்பமில்லை என படம் கைவிடப்படுவதாக முரளிதரன் அறிவித்தார். இவை 2020 இறுதியில் இந்த பிரச்னைகள் முடிந்தன.
இதற்கிடையே அந்த படத்தை மீண்டும் தொடங்குவதில் படக்குழு தீவிரம் காட்டியுள்ளது. அதன் முன்னோட்டமாக நாளை காலை 8 மணிக்கு படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனால் அவருக்கு பதிலாக யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.