திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. திரைக்கதை சொதப்பலாக அமைந்தாலும், நடிகர் தனுஷின் நடிப்பில் ரசிகர்களிடையே பாராட்டப்பட்டது.
இந்த படத்திற்கு பின் நடிகர் தனுஷ் தனது 50வது படத்தின் பணிகளை தொடங்கினார். பா.பாண்டி படத்திற்கு பின் இயக்குநர் பொறுப்பையும் தனது 50வது படத்திற்கு தனுஷ் ஏற்றுக் கொண்டார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் படத்திற்காக மொட்டையடித்து தனுஷ் காணப்பட்டார்.
இதுவரை வெளியான 49 படங்களில் நடிகர் தனுஷ் எந்த படத்திலும் மொட்டையடித்து தோன்றியதில்லை. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் தனுஷ் மட்டுமல்லாமல் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், வடிவுக்கரசி, துஷாரா விஜயன், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளி வந்தது.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமையல் கலைஞராக இருக்கும் தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மூவருமே கைகளில் கத்தியுடன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு ”ராயன்” என்று வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் காத்தவராயன் என்பது தெரிய வருகிறது. இதுவரை தனுஷ் படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கில் பெரும்பாலும் தனுஷ் மட்டுமே இடம்பெறுவார். ஆனால் தனுஷின் 50வது படத்தில் மற்ற இரு நாயகர்களும் தனுஷ் உடன் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் சந்தீப் கிஷன் தனுஷ் படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.