நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 50வது படத்தை எடுத்து வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதில் தனுஷிற்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்த சந்திப் கிஷன், இந்தப் படத்தில் இணைய இருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. தனது 50 ஆவது படத்தை தனுஷே இயக்குகிறார் என்று அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக இது உருவாக இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் சந்திப் கிசனுக்கு ஜோடியாக இவர் நடிக்கிறாராம். தனுசுக்கு தங்கை வேடத்தில் துசாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக, சென்னை ஈசிஆர் சாலையில் 600 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதனிடையே வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து, தனுஷ் மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டு, பட பூஜையில் நடைபெற்றது. அதன் பிறகு, படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இதன் அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் போஸ்டரில் அடுக்குமாடி குடியிருப்புக்கும், குடிசைக்கும் இடையே பணம் இருப்பதுபோல் காட்சி உள்ளது.
இதனால் நிச்சயம் இது அரசியல் படமாகதான் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மும்பை தாராவியை கதை களமாக கொண்டு எடுக்கப்படுவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த படத்தில் நாகர்ஜூன் நடிக்கிறார். தனுசுக்கு ஜோடியாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.