நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை எடுத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், சிவராஜ்குமார், ஜான் கொக்கேன் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரையில் நடைபெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இதற்கு இசையமைத்து இருக்கிறார்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு, இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் ப்ரி ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தனது ஐம்பதாவது படத்திற்கான வேலையில் தனுஷ் இறங்கி இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, தனுஷே இயக்குகிறார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தில் தனுசுக்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர். சகோதரியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இதுபோக செல்வராகவன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது. இதற்காக 600 வீடுகள் கொண்ட பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தில், நடிகை வடிவுக்கரசியும் இடம் பெற்றுள்ளார். அவர் சித்தர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசி இருக்கும் அவர், தனுஷ் சார் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, நானே நேரில் சென்று அவரை பார்த்தேன்.
அவர் படத்தில் எனது கதாபாத்திரம் குறித்து பொறுமையாக விளக்கினார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் டெரராகிவிடுவார். அவர் திரும்பி பார்த்தாலே உதவி இயக்குனர்கள் பயப்படுவார்கள். அவரிடம் பேசுவதற்கே எனக்கு பயமாக இருந்தது. அவ்வளவு அழகாக தனுஷ் வேலை வாங்குகிறார் என்று வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.