சத்யஜோதி பிலிம்ஸ் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் நான்காவது படம் தான் கேப்டன் மில்லர். ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இதே கூட்டணியில் தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே சத்யஜோதி பிலிம்ஸ் எப்போது அழைத்தாலும் நான் படம் பண்ணுவதற்கு தயார் என்று தனுஷ் கூறி இருந்தார்.
அதற்கேற்ப அடுத்தடுத்து படங்களை இரு தரப்பும் செய்து வருகிறது. இந்த நிலையில் தான் தனுஷ் கரியரில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் கேப்டன் மில்லர். 19040களில் நடிக்கும் கதைக்களம் என்பதால், படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. அண்மையில் தென்காசியில் நடந்த படப்பிடிப்பின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தது.
இருப்பினும் படம் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் எகிறி வருகிறது. தனுஷ் நீண்ட முடி மற்றும் தாடியுடன் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அசுரன், திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனால் கடந்த சில படங்களாக தனுஷின் சம்பளம் ரூ.40 கோடி வரை சென்றது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக ரூ.20 கோடி மட்டுமே தனுஷ் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னை நம்பி தயாரிப்பாளர் பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிப்பதால், தயாரிப்பாளரின் கோரிக்கைக்கு ஏற்ப தனுஷ் சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.