சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 படத்தை இயக்கும் வாய்ப்பு ஜெய்பீம் படம் புகழ் ஞானவேலுக்கு கிடைத்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 171 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சூர்யாவை வைத்து சம்பவம் செய்த ஞானவேல் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை நிச்சயம் வீணடிக்க மாட்டார். ரஜினியை வைத்து வேற லெவலில் சம்பவம் செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைப்பார் என தலைவர் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
ஜெய்பீமை போன்றே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் எடுக்கிறாராம் ஞானவேல். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி. அவர் ஒரு இஸ்லாமியராக நடிக்கிறாராம். போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் நபராக நடிக்கிறாராம். காவல் துறையில் நடக்கும் அத்துமீறல்களை திரையில் காட்டப் போகிறாராம் ஞானவேல். லால் சலாம் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.
இதனிடையே சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்தபடியாக ரஜினியை சந்தித்து கதை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் ரஜினிகாந்த் தங்கியுள்ளார். அவரை கே ஜி எஃப் பட தயாரிப்பாளர் உடன் நேரில் சென்று சந்தித்திருக்கிறார் சுதா கொங்கரா. அப்போது கேஜிஎப் பட நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதற்கு அவர் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக லால் சலாம் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, அதையடுத்து சுதா கொங்கரா இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனர் பாபியுடன் ரஜினி இணைய இருப்பதாக சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. லோகேஷ் கனகராஜ் உடனான ரஜினி படம் குறித்தும் அப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் தற்போது சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவும் இணைந்துள்ளதால், அடுத்து ரஜினியை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.