சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் கபாலி படத்தின் நெருப்புடா பாடல் மூலமாக பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் அறிமுகமானார். அதன்பின் தெறி, காலா, பைரவா உள்ளிட்ட படங்களிலும் தீம் பாடல்களை பாடி புகழ்பெற்றார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தின் மூலமாக அருண்ராஜா காமராஜ் இயக்குநராகவும் அறிமுகமானார். இது பலர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விவசாயம் மற்றும் கிரிக்கெட்டை இரண்டையும் ஒரே புள்ளியில் இணைத்து அருண்ராஜா காமராஜ் அமைத்த திரைக்கதை பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இதன் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். இதனைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாக நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கினார். அதுவும் சூப்பர்ஹிட் அடிக்க, தொடர் ஜெய், தன்யா ஹோப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான லேபிள் என்ற இணைய தொடரையும் இயக்கி முடித்துள்ளார்.
அது ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக நடிகர் கார்த்தியை இயக்கவுள்ளதாக நீண்ட நாட்களுக்கு முன்பாகவே தகவல் வெளியாகியது. அது அவரின் 25வது படமாக இருக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் கார்த்தி, அருண்ராஜா காமராஜ் கதையை ஒதுக்கிவிட்டு, ராஜுமுருகன் கதையில் ஜப்பான் படத்தில் நடித்தார்.
ஜப்பான் படம் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்ததாக 96 பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் நலம் குமாரசாமி இயகத்தில் ஒரு படம் என்று நடித்து வருகிறார். இதனால் நீண்ட ஆண்டுகளாக அருண்ராஜா காமராஜ் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அருண்ராஜா காமராஜ், நயன்தாராவிடம் ஒரு கதை கூறி ஓகே வாங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தை அருண்ராஜா பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.