சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அயலான். இன்று, நேற்று, நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் 5 ஆண்டுகளாக இயக்கியுள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. எலியன் சென்னைக்கு வந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்த பின் நடக்கும் கலாட்டாவே அயலான் படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த 5 ஆண்டுகள் இடைவெளியில் நாங்கள் இருவரும் நினைத்திருந்தால், இன்னொரு படத்தை வெளியிட்டிருக்க முடியும்.
ஆனால் எங்களின் இலக்கு பெரியதாக இருந்தது. எங்களுக்கு யாருடனும் போட்டியில்லை. எங்களின் படத்தை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பது மட்டுமே இலக்கு. குழந்தையாக இருந்த போது கார்ட்டூம், ஃபேண்டஸி படங்களை பார்த்திருக்கிறேன். அதுபோல் தமிழில் இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தின் டப்பிங்கை பார்த்த போது, படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்.
பொங்கல் பண்டிகைக்கு வரும் கேப்டன் மில்லர், லால் சலாம், மிஷன் உள்ளிட்ட படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஏனென்றால் தமிழ் சினிமாவுக்குள் போட்டி என்பதை விடவும், தமிழ் சினிமாவை அனைவரும் சேர்ந்து திரும்பி பார்க்க வேண்டும் என்பதே இலக்கு. இந்த படத்தில் ஏராளமான சர்ப்ரைஸ்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார். அதற்காக ஒரு சம்பளம் கூட பெற்று கொள்ளவில்லை. அதேபோல் அயலான் படத்தின் வசனம் நடிகர் மணிகண்டனால் எழுதப்பட்டுள்ளது. குட் நைட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மணிகண்டன், ஏற்கனவே விக்ரம் வேதா, காஸி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அவர் அயலான் படத்திற்கு வசனம் எழுதியிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.