நடப்பாண்டில் பாலிவுட்டில் இருந்து வெளியான முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் ஃபைட்டர். இந்திய விமான படையை மையமாக வைத்து ஹிருத்திக் ரோஷன், அனில் கபூர், தீபிகா படுகோனே உள்ளிட்ட நடித்துள்ளனர். ஜனவரி 25ல் வெளியான இந்த திரைப்படம், இந்தியளவில் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறவில்லை.
தொடர் விடுமுறை நாட்கள் வந்த போது, இந்தியளவில் ஃபைட்டர் திரைப்படம் ரூ.160 கோடி அளவிலேயே வசூல் ஈட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திங்கட்கிழமைக்கு பின் ஃபைட்டர் படத்தின் வசூல் மொத்தமாக படுத்துள்ளது. உச்ச நட்சத்திரங்கள், கண்களை கவரும் காட்சிகள், டிராமா என்று அத்தனையும் இருந்து ஃபைட்டர் திரைப்படம் போதிய வசூலை ஈட்டவில்லை.
இது மீண்டும் பாலிவுட் சினிமாவை கலங்க வைத்துள்ளது. இதனால் ராணுவம் தொடர்புடைய படங்களை எடுத்த வந்த தயாரிப்பாளர்களுக்கு பீதியை கொடுத்துள்ளது. ஏற்கனவே விக்கி கவுஷல் நடிப்பில் வெளியான சாம் பஹதூர் திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. ஹிருத்திக் ரோஷன் படமும் லாபத்தை கொடுக்காததால், பாலிவுட் இயக்குநர்கள் குழம்பியுள்ளனர்.
இதனிடையே ஃபைட்டர் திரைப்படத்திற்காக ஹிருத்தி ரோஷன் வாங்கிய சம்பள விவரம் தெரிய வந்துள்ளது. அந்த படத்திற்காக மட்டும் ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.85 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீபிகா படுகோனேவுக்கு ரூ.20 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் குறைந்ததற்கு அவரின் தோல்வி படங்களே காரணமாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான விஜய் மற்றும் அஜித்குமார் இருவரின் சம்பளங்களையும் காட்டிலும் ஹிருத்திக் ரோஷனுக்கு குறைவாக சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. GOAT படத்திற்காக மட்டும் நடிகர் விஜய் ரூ.110 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அதேபோல் விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித்குமாருக்கு ரூ.105 கோடி சம்பளத்தை லைகா நிறுவனம் அளித்துள்ளது.