கோலிவுட்டில் யதார்த்தமான கதைக்களத்தை அமைப்பதில் திறமையான இயக்குனர் யார் என்றால் அது நிச்சயம் சேரனாகத்தான் இருக்க முடியும். உதவி இயக்குனராக இருந்த காலத்தில், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சேரன், பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே சாதிப் பிரிவினையை கையில் எடுத்த இயக்குனர் சேரன், அதை சரியான முறையில் சொல்லி பாராட்டைப் பெற்றார்.
ஆதிக்க சாதியினரின் வீட்டில் வேலை பார்க்கும் தலித் இளைஞரை, அந்த வீட்டின் பெண் காதலிக்க அதன் பிறகு நடக்கும் பிரச்சினைகளையும், அழுத்தமான கிளைமாக்சையும் காண்பித்து அதிர வைத்தார். இதன் பிறகு பொற்காலம், தேசிய கீதம் திரைப்படங்களை எடுத்த சேரனுக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது வெற்றி கொடி கட்டு திரைப்படம்.
வெளிநாட்டில் வேலை பார்த்தால்தான் ஆத்ம திருப்தி என கருதும் இளைஞர்களையும், அவர்கள் வீட்டின் பின்னணியையும் திறம்பட சொல்லி மாறுபட்ட கதைக்களத்தை ரசிகர்கள் கண்முன் காட்டிய சேரன், அந்த திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை கண்டார். இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைக்க, சேரனை தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். இதன் பிறகு பாண்டவர் பூமி திரைப்படத்தை எடுத்து, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை கொடுத்தார் சேரன்.
ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு கதைகளத்தை கையில் எடுக்கும் சேரனை, ஒட்டுமொத்த திரையுலகமும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் என்னவென்றால் ஆட்டோகிராப் தான். இளம் வயது தொடங்கி இளைஞன் ஆகும் வரை ஒரு ஆணின் பின்னால் இருக்கும் காதலை சுவாரசியமாக கூறிய சேரன், ஆட்டோகிராப் திரைப்படம் மூலம் அனைவரையும் சிறுவயது உலகிற்கு அழைத்துச் சென்றார். இந்தப் படமும் தேசிய விருது பெற, அடுத்ததாக தந்தை மகன் உறவை பறைசாற்றிய தவமாய் தவமிருந்து படமும் தேசிய விருதை பெற்றது.
தற்போது இயக்கத்தில் இருந்து ஓய்வு எடுத்து, முழு நேரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சேரன், சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அது குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருக்க, சேரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த இயக்குனர்,
விஜய் சேதுபதியுடன் படம் பண்ணவில்லை. இனிமேல் பண்ணவும் முடியாது. இதில் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவர் நிலை உயர்ந்து விட்டது. அதனால் அவருக்கான கதையை மாற்றியமைக்க வேண்டும். அவரும் பிஸியாக இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு அவரிடம் கால்ஷீட் பெற முடியாது. இதனால் அவரோடு படம் பண்ண முடியாது என்று கூறிவிட்டார். இந்த பதில் மூலம் விஜய் சேதுபதி மீது சேரன் காட்டமாக இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று இணையதளவாசிகள் கூறி வருகின்றனர். சேரனுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே அப்படி என்ன சண்டையாக இருக்கும் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.