69வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த கடைசி விவசாயி படத்திற்காக மணிகண்டனுக்கும், சிறப்பு விருதாக அந்தப் படத்தில் நடித்த நல்லாண்டிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த நடிகராக புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜூன் தேசிய விருது வென்றுள்ளார்.
அதேபோல் பாடல்களுக்காக புஷ்பா படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத், பின்னணி இசைக்காக கீரவாணி உள்ளிட்டோர் வென்றுள்ளனர். தமிழில் கடைசி விவசாயி தவிர்த்து வேறு எந்த படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்படவில்லை. ஸ்ரீகாந்த் தேவாவிற்கு குறும்படம் ஒன்றுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் வெளியான ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை.
குறிப்பாக சார்பட்டா பரம்பரையில் நடித்த பசுபதி, மாநாடு படத்தின் எடிட்டிங், ஜெய் பீன் மணிகண்டன் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை. அதேபோல் இந்தி படங்களான மீமீ மற்றும் கங்குபாய் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சனோன் மற்றும் ஆலியா பட் ஆகியோருக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜெய் பீம் படத்தில் நடித்த நாயகியான லிஜோமோல் ஜோஸ்-க்கு எந்த விருதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களையும், விரக்தியையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இம்முறை தெலங்கானாவில் தேர்தல் நடக்கவுள்ளதால், தெலுங்கு சினிமா உலகிற்கு அதிக விருதுகளை வழங்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.