தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விக்கு பின் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். பீஸ்ட் படத்தின் விமர்சன ரீதியான தோல்விக்கு பின், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துடன் ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் சிவராஜ் குமார், மோகன் லால், தமன்னா, ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த ரவி, மிர்ணா, சுனில் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் ஆற்றிய 45 நிமிட உரை அவரின் ரசிகர்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஜெயிலர் படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அதற்கேற்ப படத்தின் ப்ரீ புக்கிங்கிலும் ஜெயிலர் படம் சாதனை படைத்தது.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் நேற்று ரிலீஸாகியது. படத்தின் முதல் பாதியில் அட்டகாசம் செய்துள்ளதாகவும், இரண்டாம் பாதியில் படம் சற்று தொய்வு இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் ஜெயிலர் படம் சுமாருக்கும் மேல் இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன. இதனால் தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ஜெயிலர் எவ்வளவு மேல் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.
இதனால் நேற்றைய தினம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினார்கள். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் முதல் நாளிலேயே ஜெயிலர் படம் ரூ.85 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் தமிழக ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் இந்தியாவில் மட்டும் ரூ. 48 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் துணிவு படத்தின் முதல் நாள் வசூலை ஜெயிலர் படம் முறியடித்துள்ளது. அண்மையில் வெளியாகிய படங்களிலேயே முதல் நாளில் வசூலில் துணிவு முதலிடத்தில் இருந்த நிலையில், அந்த சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளது.