ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்திலிருந்து அடுத்த பாடல் வரும் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்துவேல் பாண்டியனாக ரஜினி
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்புடன் மினி டீசர் ஒன்றையும் வெளியிட்டு மாஸ் காட்டினார் நெல்சன். ஜெயிலர் படத்தில் ரஜினி, தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, அதனை கேக் வெட்டி கொண்டாடியது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
ரசிகர்களை சூடேற்றிய தமன்னா
ஜெயிலர் படத்தின் முதல் பாடலாக காவாலா என்னும் பாடல், கடந்த ஆறாம் தேதி வெளியானது. இயக்குனர் அருண் ராஜா காமராஜ் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு நடிகை தமன்னா குத்தாட்டம் போட்டு உள்ளார். பாடலில் ரஜினி இடம் பெற்றிருந்தாலும் ரசிகர்களின் கண்கள் முழுவதும் தமன்னா மீதே விழுவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முணுமுணுக்கும் ரகத்தில் இருப்பதால் பலரின் ரிங்டோனாகவும் மாறியது.
அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு
காவாலா பாடல் ஹிட் அடித்தாலும் அதில் தமன்னாவையே முன்னிலைப்படுத்தி இருப்பதாகவும், ரஜினி தேவையே இல்லாமல் இடம் பெற்றிருப்பதாகவும் பலர் சமூக வலைதளங்களில் வம்பு இழுத்தனர். இதனால் சூடாகி போன ரஜினி ரசிகர்கள், நெல்சன் மீது காட்டமாக கமெண்ட் அடித்து வந்தனர். இந்நிலையில் அவர்களை கூல் செய்யும் விதமாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாடல் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான போஸ்டரும் வெளியான நிலையில், அதில் ரஜினி மாஸாக இருப்பதால் பாட்டு நிச்சயம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.
டைகர்கா ஹுகும் பாடல்
இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் அடுத்த பாடல் வரும் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டைகர்கா ஹும் என தொடங்கும் இந்த பாடல், ரஜினியின் கர்ஜிக்கும் குரலில் ஆரம்பிக்கிறது. இதனால் பாடல் செம மாஸாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், முதல் பாடலான காவாலா தெலுங்கு பாணியில் இருந்ததாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டைகர்கா ஹும் பாடல் ஹிந்தி மொழி பாணியில் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். ஒரு வேளை பான் இந்தியா படம் என்பதை தவறாக புரிந்துகொண்டு ஒவ்வொரு மொழியிலும் ஒரு பாடலை நெல்சன் எடுத்திருக்கிறாரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.