சூர்யாவின் 42வது பட அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இயக்குநர் சிறத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்னும் படத்தில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது. இந்த படம் மூலம் பாலிவுட் நடிகையான திஷா பதானி தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் காமெடி கேரக்டரில் யோகி பாபு, கோவை சரளாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். கொடைக்கானல் வனப்பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.
கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய காலத்துக்கும், முந்தைய பிறவிக்கும் உள்ள தொடர்புதான் கங்குவா திரைப்படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது. சூர்யாவுக்கு வித்தியாசமான திரைப்படமாக கங்குவா இருக்கும் என்றும், படத்தின் சிஜி பணிகள் மும்பையில் நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.
கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. மிரட்டும் காட்சிகளுடன் சூர்யா தனது ஆக்ரோஷமான குரலில், நலமா என விசாரிக்க அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை தெறிக்க விட்டனர். தற்போது சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் சூர்யா சம்பந்தபட்ட காட்சிகள் முடிவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் வில்லனாக நட்டி நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் படத்தில் சைட் வில்லன்தான் என்றும், மெயின் வில்லன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு என்றும் கூறப்படுகிறது. முந்தைய சிவா படங்களான விஸ்வாசம், அண்ணாத்த படத்தில் அவர் நடித்திருக்க, இந்த முறையும் அவரே வில்லனாக இருப்பதால் முகம் சுழித்துள்ள ரசிகர்கள், வேறு ஆளே கிடைக்கலையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.