பீட்சா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். ஆரம்பத்தில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறும்படங்களை இயக்கி வந்த அவர், அதில் எடுத்த கதையையே பின்னாளில் பீட்சாவாக வெள்ளித்திரையில் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவில் ஆழமாக வேரூன்றிய கார்த்திக் சுப்புராஜ், நிச்சயம் பின்னாளில் பெரிய இயக்குநராக வலம் வருவார் என்று பேசப்பட்டார்.
அதற்கு முக்கிய காரணம், பீட்சாவுக்காக அவர் எடுத்த திரைக்கதை மொழிதான். ஒரு பொய்யான கதையை 2 மணி நேரம் எந்தவொரு விறுவிறுப்பும் குறையாமல் ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைத்து கார்த்திக் சுப்புராஜ் சபாஷ் போட வைத்திருந்தார். இதற்கு பிறகு, அவர் எடுத்த திரைப்படம் ஜிகர்தண்டா. மதுரையில் மிகப்பெரிய ரவுடியாக சுற்றித்திரிபவனின் வாழ்க்கையை ஒரு சினிமா எப்படியெல்லாம் புரட்டி போடுகிறது என்பதை தனக்கே உண்டான பாணியில் எடுத்து கார்த்திக் சுப்புராஜ் ரசிக்கவைத்தார்.
அதில் அசால்ட் சேதுவாகவே வாழ்ந்த பாபி சிம்ஹா, அந்த ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார். முதல் இரண்டு படங்கள் மூலம் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் சேர்ந்த கார்த்திக் சுப்புராஜுக்கு மூன்றாவது திரைப்படமான இறைவி, தோல்வியைக் கொடுத்தது. படம் இரண்டாம் பாதி வேறு எங்கோ ஒரு பாதையில் முட்டி மோதி சென்றதால் எதிர்பார்த்த வரவேற்பு அதற்கு கிடைக்கவில்லை. இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவுக்கு இறைவி திருப்புமுனையை கொடுத்தது.
ஒரு நடிகராக தோற்று திரையுலகை விட்டு வெளியே போனவர், மீண்டும் அதே நடிப்பின் மூலம் பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்தார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து, ரஜினியுடன் பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இணைந்தார். முழுக்க முழுக்க ஒரு ரஜினி ரசிகனாகவே படத்தை எடுத்து முடித்த அவர், ஃபேன் பாய் மொமெண்ட் காட்சிகளை நிறைய வைத்தார். கலவையான விமர்சனத்தை பேட்ட திரைப்படம் பெற்றாலும், ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அந்த படம் அமைந்தது. தொடர்ந்து, தனுஷுடன் ஜகமே தந்திரம் எடுத்துவிட்டு, இப்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸை தொட்டிருக்கிறார்.
லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், வரும் தீபாவளியன்று வெளியாகிறது. இதில், லாரன்ஸ் மதுரை ரவுடியாகவும், எஸ்.ஜே.சூர்யா, திரைப்பட இயக்குநராகவும் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் எடுக்கப்பட்டிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. 1975ம் ஆண்டில் நடக்கும் கதைகளமாக இந்த படம் உருவாகியுள்ளது. டிரைலரின் ஆரம்பத்திலேயே இந்தியில் பேசி கவனத்தை ஈர்க்கிறார் எஸ்ஜே சூர்யா. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பை கூட்டுவதாக இருக்கும், இந்த முறை பழங்குடியினரின் பிரச்சினையை இயக்குநர் பேச தயாராகி இருப்பது டிரைலரின் மூலம் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக இதன் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.