Thursday, November 21, 2024
- Advertisement -
Homeஇந்தியாவில் யாரும் எட்டாத கமலஹாசனின் சாதனை - ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாசனின் 5 திரைப்படங்கள்
Array

இந்தியாவில் யாரும் எட்டாத கமலஹாசனின் சாதனை – ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாசனின் 5 திரைப்படங்கள்

திரைத் துறையை பொறுத்த வரையில் உலகளாவிய சிறந்த பெருமைக்குரிய உச்ச விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கார் விருது. அந்த விருதை எப்படியாவது ஒருமுறை கைப்பற்றி விட வேண்டும் என்கிற ஆசை அனைவர் மத்தியிலும் நிச்சயம் இருக்கும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

ஆஸ்கர் விருது விழாவில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்கிற பிரிவில் ஒரு படத்திற்கு விருது வழங்கப்படும். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு இயக்குனர்கள் தாங்கள் இயக்கிய திரைப்படத்தினை இந்த பிரிவில் சமர்ப்பிப்பார்கள். ஆனால் சாதாரணமாக அவ்வளவு எளிதில் எல்லா திரைப்படத்தையும் சமர்ப்பித்து விட முடியாது.

உதாரணத்திற்கு இந்திய அரசால் தனியாக அமைக்கப்பட்ட ஒரு குழு ஒன்றினால் திரைப்படங்கள் தரம் பார்க்கப்பட்டு சிறந்த திரைப்படங்களை மட்டுமே ஆஸ்கார் விருதுக்கு (சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்கிற பிரிவில் )சமர்ப்பிக்கப்படும்.

- Advertisement -

அப்படி இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தெய்வமகன் முதன்முதலில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இத்திரைப்படம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இன்றுவரை பல்வேறு தமிழ் திரைப்படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதில் அதிகமாக கமல்ஹாசன் திரைப்படங்கள் தான் இதுவரை அதிக அளவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஐந்து கமல்ஹாசன் படங்கள் இதுவரை இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருது வெல்லவில்லை என்றாலும் கமலஹாசனின் ஐந்து சிறந்த திரைப்படங்கள் ஆஸ்கார் வரை சென்றது நம் அனைவருக்கும் பெருமை தான். அந்த ஐந்து திரைப்படங்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

நாயகன்

1987ஆம் 4 அக்டோபர் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் நாயகன். கதையின் நாயகனாக உலகநாயகன் கமலஹாசன் நடித்திருப்பார். நடித்து இருப்பார் என்று சொல்வதைவிட கதையின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார். மும்பையில் வாழ்ந்த தாதாவான வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாக எடுத்து கொண்டு மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களை தற்போது வரை அனைவர் மத்தியிலும் அடிக்கடி கேட்கப்படும் பாடல்களாக அமைந்தது. தோட்டா தரணி கலை இயக்குனராக தனது வேலையை கச்சிதமாக செய்ய, பிசி ஸ்ரீராமின் அழகிய ஒளிப்பதிவில் இத்திரைப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டது.

1988ஆம் ஆண்டு நடந்த தேசிய விருது விழாவில் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிசி ஸ்ரீராமுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது, தோட்டாதரணி க்கு சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது.

1988 ஆம் ஆண்டு அறுபதாவது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்கு நாயகன் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

தேவர் மகன்

1992 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் தேவர் மகன். இரு இமயங்கள் இணைந்து ஒன்றாக நடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் இவர்கள் இருவரும் அப்படியே பொருந்திப் போனார்கள். இவர்களது நடிப்பு ஒரு பக்கம் இருக்க பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு இளையராஜாவின் இசையும் படத்திற்கு முதுகெலும்பாக அமைந்தது.

கமல்ஹாசன் கதை மற்றும் திரைக்கதை எழுத, பரதன் இத் திரைப்படத்தை இயக்கினார். பரதன் இயக்கிய இத்திரைப்படம் அனைவருக்கும் ஒரு சரியான கருத்தை எடுத்து வைத்தது.1993 ஆம் ஆண்டு தேசிய விருது விழாவில் இந்த திரைப்படம் 5 விருதுகளை தட்டிச் சென்றது. ஃபிலிம் ஃபேர் விருது விழாவிலும், தமிழ்நாடு அரசு சார்பாக கொடுக்கப்படும் ஸ்டேட் பிலிம் விருது விழாவிலும் தலா இரண்டு விருதுகளை இத்திரைப்படம் கைப்பற்றியது. அறுபத்தி ஐந்தாவது ஆஸ்கார் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குருதிப்புனல்

1995ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜூன் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் குருதிப்புனல். இத்திரைப்படத்தை எப்பொழுது பார்த்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் நம் இதயத்தை ரணமாக்கி விடும். அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இயக்கி இருப்பார்.

பொதுவாக கல்ட் கிளாசிக் என்று சொல்லப்படும் கலாச்சாரம் தற்போது அதிக அளவில் இருந்தாலும் அப்பொழுது இந்த படம் கல்ட் கிளாசிக் என்றால் என்ன என்று பாடம் எடுத்தது. கமலஹாசனின் ஸ்கிரீன்பிளே ரசிகர்கள் அனைவரையும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை கட்டிப் போட்டு உட்கார வைத்தது.

திரைப்படத்திற்காக சிறந்த நாயகன் விருதை பிலிம்பேர் விருது விழாவில் கமலஹாசன் வென்றார். அறுபத்தி எட்டாவது ஆஸ்கார் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியன்

1996 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சாட்டையை பேனா வடிவில் கையில் எடுத்தார். லஞ்சம் வாங்குவது தப்பு அதேசமயம் லஞ்சம் கொடுப்பதும் தப்பு என வசனங்களில் நம் அனைவருக்கும் சிறந்த பாடத்தைப் புகட்டினார்.

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் தற்பொழுது கேட்டால்கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம். பாடல்கள் மட்டுமின்றி பேக்ரவுண்ட் ஸ்கோரில் ஏ ஆர் ரகுமான் மற்ற இசையமைப்பாளர்களுக்கு வகுப்பெடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்குத் துல்லியமாக இதில் அவர் வேலை பார்த்திருந்தார்.

சிறந்த திரைப்படமாக அனைவரும் மனதையும் வென்ற இத்திரைப்படம் விருதுகளையும் வென்றது. மூன்று தேசிய விருது இரண்டு பிலிம்பேர் விருது மற்றும் இரண்டு தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது என விருதுகளை அடுக்கடுக்காக தட்டிச் சென்றது. கமல்ஹாசன் தேசிய விருது பிலிம்பேர் விருது மற்றும் தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது என மூன்றிலும் சிறந்த நடிகருக்கான விருதை கைப்பற்றினார். 1999ஆம் ஆண்டு நடந்த அறுபத்தி ஒன்பதாவது ஆஸ்கார் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹே ராம்

இரண்டாயிரத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தற்போது பார்த்தால் கூட நம் அனைவரதும் புருவங்களை உயரச் செய்யும். கமல்ஹாசனின் பேனா இதில் தேசிய பற்றை பற்றி நிறைய பேசி இருக்கும். இத்திரைப்படத்தை கமலஹாசனே இயக்கியது குறிப்பிடத்தக்கது. ஸ்கிரீன்பிளேயில் மாயாஜாலம் செய்த திரைப்படம் இது. ஒரு திரைப்படத்தை இப்படியும் எடுக்கலாமா என்று அனைவருக்கும் சினிமா பற்றிய விஷயங்களை இத்திரைப்படம் புரிய வைத்தது. இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் தற்போதுவரை ஒரு திரைப்படம் எப்படி இயக்கலாம் என்று யோசிக்கும் இளம் இயக்குனர்களுக்கு பாடமாக இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

மூன்று தேசிய விருதும் ஒரு ஃபிலிம்ஃபேர் விருதும் இந்தத் திரைப்படம் வென்றது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை கமலஹாசன் வென்றார். இத்திரைப்படமும் 2001ஆண்டுஇந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக கமலஹாசனின் 5 திரைப்படங்கள் இதுவரை இந்திய மொழி சார்பாக ஆஸ்காருக்காண சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. விருதை வெல்லவில்லை என்றாலும் கமல்ஹாசனின் இந்த ஐந்து சிறந்த திரைப்படங்கள், தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்கார் வரை சென்றது என்று சொல்லி நாம் மார்தட்டிக் கொள்ளலாம்.

Most Popular