பருத்திவீரன் மூலம் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் இதயங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் கார்த்தி. ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்து உச்சம் பெற்றார். அதன்பின் சில படங்களில் சறுக்கினாலும் மெட்ராஸ் மூலம் மீண்டும் தனது இடத்தை பிடித்துக் கொண்டார்.
தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் என்று வெவ்வேறு ஜானர்களில் படங்களை நடிக்க தொடங்கியுள்ளார். இதுவரை 24 படங்களில் நடித்து முடித்த கார்த்தி, 25வது படமாக ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் ஜப்பான் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தப் படம் குறித்து கார்த்தி பேசும் போது, தனக்காக ஒரு கதை எழுத முடியுமா என்ற ராஜுமுருகனிடம் கேட்டு இந்தப் படத்தில் நடித்து வருவதாக கூறியிருந்தார். இதன்பின் ஜப்பான் படத்தில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது. அதில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளித்த கார்த்தி, ஜப்பான்.. மேட் இன் இந்தியா என்று பேசிய வசனம் ரசிகர்களிடையே வைரலாகியது.
இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜப்பான் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜப்பான் கதாபாத்திரத்திற்காக டப்பிங் பேசும் நடிகர் கார்த்தியின் குரலை இயக்குநர் ராஜுமுருகன் ஏற்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் டப்பிங் மூட் செட்டாகவில்லை என்று ராஜுமுருகன் கூற, உடனடியாக ஜப்பான் படத்தில் கெட்டப் போட்டுக் கொண்டு கார்த்தி வருகிறார். அந்த கெட்டப்பை போட்ட பின் நடிகர் கார்த்தி, கர்மானா என்னனு தெரியுமா.. அதுவரைக்கும் கொசுனு நினைச்சதெல்லாம் டைனோசரா முன்னாடி வந்து நிக்கும் என்று மாஸ் வசனத்தை பேச, ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் ஏற்படுகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.