மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களையும், மல்டி ஸ்டாரர் படங்களையும் சிறப்பாக இயக்கி வருவதால் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
லியோ ஷூட்டிங் நிறைவு
தற்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா என்று ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். காஷ்மீரில் முதல் ஷெட்யூலையும், சென்னையிலும் மீதமிருந்த காட்சிகளையும் படக்குழு படமாக்கி படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்துள்ளது.
6 மாதத்தில் 126 நாட்கள் ஷூட்டிங் நடத்தி லியோவை முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது கிராஃபிக்ஸ், டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் லியோ படம் எல்சியூவில் இருக்குமா என்றும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்என்எஸ் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார்.
லோகேஷ் கனகராஜ் பேச்சு
அந்த விழாவில் பேசும் போது, அடுத்ததாக பெரிய படம் ஒன்றை எடுக்கவுள்ளேன். அதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும். அதன்பின் கைதி – 2 படத்தை எடுக்கவுள்ளேன். அஜித்துடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்வேன். அதேபோல் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.
கடுப்பான லோகேஷ் கனகராஜ்
அதன்பின் மேடையில் மாணவர்களுக்கு விருதுகளை லோகேஷ் கனகராஜ் கொடுத்தார். இந்த நிலையில் திடீரென விருதை பெற்றுக் கொண்ட மாணவி ஒருவர், திடீரென லோகேஷ் கனகராஜ் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயன்றார். இதனால் கோபமடைந்த லோகேஷ் கனகராஜ், உடனடியாக மாணவியை தடுத்து நிறுத்தி திட்டச் சென்றார்.
இந்த வீடியோவை பகிர்ந்த சர்ச்சை விமர்சகர் ப்ளூசட்டை மாறன், லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அம்மாணவியை கடிந்து கொண்டார். கல்லூரி வளாகத்தினுள்… பட ப்ரமோஷனுக்காக திரைப்பட கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை. இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகிறதோ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.