விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் எடுக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கொரோனா ஊரடங்கு காலத்தில் திரையரங்குகளின் நிலைமை பரிதாபத்திற்குரிய நிலைக்கு சென்றது. அந்த நேரத்தில் திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடியில் நேரடியாக வெளியானதால், இனி திரையரங்குகள் உயிர் பெறுவது கடினம் என பலரும் பேசிக்கொண்டனர். இந்த கூற்றுக்கு ஏற்றதுபோலவே, திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களுக்கு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.
அதுவும் கூட்டத்தில் சென்று முண்டியடித்து படம் பார்ப்பதை பலரும் வெறுத்தனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வேதனையில் இருக்க, அவர்களின் துயரத்தை துடைத்தது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ப்பட்டு வந்த நேரம் அது. திரையரங்குகளில் வெறும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இப்படியான சமயத்தில்தான் மாஸ்டர் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டது.
எதுவாயினும், திரையரங்குகளில்தான் படம் வெளியாக வேண்டும் என்பதில் தளபதி விஜய் உறுதியாக இருக்க, 2021ம் ஆண்டு பொங்கலன்று மாஸ்டர் வெளியானது. படம் ஹிட் அடிக்குமா, திரையரங்குகளுக்கு மக்கள் திரும்புவார்களா என உரிமையாளர்கள் பலரும் காத்திருக்க, அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்தது மாஸ்டர் திரைப்படம்.
வசூல் ரீதியில் படம் சக்கைப்போடு போட, தமிழ்நாட்டின் திரையரங்குகள் மீண்டும் புத்துயிர் பெற்றன.
இப்படி திரையரங்கு உரிமையாளர்களின் வயிற்றில் பால் வார்த்த விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி, இப்போது லியோ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. செவன் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க, வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் படம் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா, வரும் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், லியோ குறித்து முக்கியமான தகவலை மாஸ்டர் படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சமீபத்தில் எடிட் ஸ்டுடியோவில் லோகேஷ் கனகராஜ் அண்ணாவை சந்தித்தேன். அவர், திரையில் பயங்கரமாக வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்து கேள்வி எழுப்பினேன்.
இதற்கு பதில் கூறிய அவர், தளபதிக்கான ஓபனிங் காட்சி சென்று கொண்டிருக்கிறது. நீ பார்க்கிறாயா… நீ கண்டிப்பாக பார்க்க வேண்டும். பார்த்ததை யாரிடமும் கூற கூடாது. இதுதான் உனக்கு தண்டனை என்று தெரிவித்தார். உண்மையில் கூறுகிறேன். தளபதி ஓபனிங் காட்சியின் முதல் ஐந்து நிமிடங்களை பார்த்தேன். இது மாஸ்டர் படத்தில் விஜய் வருவதை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரனின் இந்த தகவலை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.