மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று தமிழ் சினிமாவில் அதிரி புதிரி ஹிட் கொடுத்து சிறந்த இயக்குநராக கொண்டாடப்பட்டு வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது கனவுப் படமாக இரும்புக்கை மாயாவி படத்தை அண்மையில் குறிப்பிட்டார். சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த இரும்புக்கை மாயாவி திரைப்படம் ஃபாண்டஸி கலந்த கமர்ஷியல் திரைப்படமாகு. இன்னும் சொல்லப் போனால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோ படம் என்று கூட சொல்ல முடியும்.
மாநகரம் படத்திற்கு பின் 2.5 ஆண்டுகள் இடைவெளியில் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை எழுதி முடித்தார். சூர்யாவிற்கு கதை கூறப்பட்டு அந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் சூர்யாவுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக அந்தப் படம் அந்த நேரத்தில் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இதன்பின்னர் தான் கார்த்தியை வைத்தி கைதி படத்தை இயக்கி பெரும் ஹிட் கொடுத்தார். இதன்பின் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க சூர்யா அதிக விருப்பம் தெரிவித்திருந்தார். இதனால் விரைவில் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சூர்யாவிற்கு ரோலஸ் மற்றும் இரும்புக்கை மாயாவி படத்தின் கதையை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் படம், கைதி – 2 உள்ளிட்ட படங்களை முடித்த பின் சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இரும்புக் கை மாயாவி படத்தின் அப்டேட் வெர்ஷன் கதையை கூறியுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.