மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ உள்ளிட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ள அவர், விஜய், சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் பணியாற்றிவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக அடுத்த படத்தில் ரஜினிகாந்தை இயக்கவுள்ளார். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரித்விராஜ் உள்ளிட்ட ஏராளமான முக்கிய நட்சத்திரங்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக நண்பர்கள், உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் தனது தயாரிப்பில் உருவாகி வரும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் உறியடி நாயகன் விஜய் குமார் நாயகனாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஃபைட் கிளப் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் வெளியான ஃபைட் கிளப் திரைப்படம் ஆல்டர் ஈகோவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாகும். ஃபின்சரின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், தனது தயாரிப்பில் வெளியாகும் முதல் படத்திற்கு ஃபைட் கிளப் என்று பெயரிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் டிசம்சர் மாதம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருவதும் தெரிய வந்துள்ளது. டிசம்பர் மாதம் பெரிய படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால், ஏராளமான சிறிய படங்கள் வரிசை கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.