விரைவில் வெளியாகும் எல்ஜிஎம் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தோனி தயாரிப்பில் தமிழ் படம்
தோனி மனைவி சாக்ஷியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. எல்.ஜி.எம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக டீசர் அமைந்தது.
இதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனி பிணைப்பு உள்ளதால், தனது புரொடக்ஷனில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்து, இந்த அறிவிப்பு வெளியானது. படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.
மாமியார் மருமகள் கதை
அண்மையில் தான் எல்.ஜி.எம். படக்குழு படப்பிடிப்பை முடித்து அதற்கான கொண்டாட்டத்திலும் ஈடுபட்டது. L.G.M என்பது லெட்ஸ் கெட் மேரீட் என்பதின் சுருக்கம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல சினிமா பார்த்ததற்கான அனுபவத்தைத் தரும். ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலரை எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து வெளியிட்டனர். இதைப் பார்க்கும்போது படம் காதலை மையமாக வைத்த கலகலப்பான கதையம்சம் கொண்டதாகவும், மாமியார் மருமகளுக்கு இடையேயான உறவை எடுத்துச் சொல்லும் விதமாகவும் இருப்பதை உணர முடிகிறது. ஹரிஷ் கல்யாண் தாயாக நதியா நடித்துள்ளார். இறுதியில் வரும் யோகிபாபுவுக்கான காட்சி சர்ப்ரைஸ்.
முதல்முறையாக திரையில் தோனி
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்ஜிஎம் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. வரும் 28-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் எல்.ஜி.எம்மில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மகேந்திர சிங் தோனி நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் வெள்ளித்திரையில் தோனியை காண தயாராகி வருகிறது.