நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ரஜினிகாந்த் நிகழ்த்துவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் லால் சலாம் படத்தில் நடித்து அவரே மார்க்கெட்டை கெடுத்து கொண்டார்.
அதன்பின் அடுத்ததாக வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரிதாக ஈர்க்கவில்லை. ராணா, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என்று நட்சத்திர பட்டாளமே நடித்தாலும் பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் இணையவுள்ள படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் வித்தியாசமாக வாட்ச்-களை வைத்து கைதிகளின் கைகளை கட்டும் விளங்கை அணிந்து ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் டைட்டில் வீடியோ ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் போட்டோஷூட் எடுத்து முடித்துவிட்டது தெரிய வந்துள்ளது. விரைவில் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் தொடங்கவுள்ளார்.
இந்த படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசும் போது, ரஜினி சாரிடம் எனக்கு மிகவும் பிடித்தது வில்லத்தனம் தான். எனது படத்தில் அந்த வில்லத்தனத்தை மீண்டும் பார்க்கலாம். அதனை வைத்தே திரைக்கதை அமைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் போஸ்டர் மற்றும் கைகளில் வாட்ச் இருப்பதால், டைம் மெஷின் கான்செப்டில் படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.