அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின் ரஜினிகாந்தும், பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின் நெல்சன் திலீப்குமாரும் இணைந்துள்ள படம் ஜெயிலர். ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, மிர்ணா, சுனில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஏற்கனவே ஜெயிலர் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், படத்தின் கதை கமல்ஹாசனின் விக்ரம் கதையை போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் ஜெயிலர் பட வெளியீட்டு பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்த சன் பிக்சர்ஸ், ஒரேயொரு இசை வெளியீட்டு விழாவை நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த மேடையில் ரஜினிகாந்த் பேசிய ஒற்றை பேச்சே ஜெயிலர் படத்தின் மீது அவர் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஜெயிலர் முன்பதிவு சக்கைப்போடு போட்டு வருகிறது.
முன்பதிவு மூலமாக மட்டுமே ரூ.80 கோடி வரை ஜெயிலர் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தை நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் சன் டிவி அலுவலகத்தில் அமர்ந்து பிரத்யேகமாக பார்த்தார். இதனால் ரஜினிகாந்த் உற்சாகமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் படம் நாளை ரிலீஸாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேசும் போது, கொரோனா பரவல் காரணமாக 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்ல முடியவில்லை. கடைசியாக 2019ல் தான் செல்ல முடிந்தது.
இதனால் தற்போது செல்கிறேன். ஜெயிலர் படத்தை நீங்கள் எல்லோரும் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மையில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கை முடித்த ரஜினிகாந்த் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். தற்போது உடனடியாக இமயமலை புறப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.