எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு, கோச்சடையான், லிங்கா, கபாலி, தர்பார், அண்ணாத்த என ரஜினிகாந்த் நடித்த அனைத்து திரைப்படங்களுமே கலவையான விமர்சனத்தையே கொடுத்தது. இடையில் காலா மற்றும் பேட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் ரஜினிகாந்துக்கு உண்டான வசூலை அந்த திரைப்படங்கள் பெற தவறின. இருப்பினும், தொடர்ந்து கதைகளை தேர்வு செய்து வந்த ரஜினிகாந்த், பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.
இந்த நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் உடன் ரஜினி இணைந்தார். அந்த நேரத்தில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்ததால், அவருடன் ரஜினிகாந்த் இணைய தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கிய சூப்பர் ஸ்டார், நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில், கன்னட பிரபலம் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட்டைச் சேர்ந்த ஜாக்கி ஜெரஃப், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பத்தாம் தேதி வெளியான இந்த திரைப்படம், நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்தது.
படத்தில் ரஜினிக்கான மாஸ் காட்சிகளை பார்த்து பார்த்து செதுக்கிய நெல்சன், முதல் பாதியில் அமர்க்களப்படுத்தி இருந்தார். இரண்டாம் பாதியில் கதை வேறொரு திசையில் பயணித்தாலும், அங்கே சிறு சிறு திருப்புமுனைகளை வைத்து ரசிகர்களுக்கு எதிர் பாராத ட்விஸ்ட்டை கொடுத்ததால் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. சிவராஜ்குமாருக்கும், மோகன்லாலுக்கும் படத்தின் இறுதிக் காட்சியில் மாஸ் காட்சியை வைத்த நெல்சன், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி, தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்கள் படத்திற்கு படையெடுத்தனர். வெளிநாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலரை கொண்டாடினர். குறிப்பாக, தமிழில் வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து போலா சங்கர் என்னும் பெயரில், சிரஞ்சீவி நடித்த படம் வெளியாகி மண்ணைக் கவ்வியது. இதனால், போலா சங்கர் திரையிட்ட இடங்களில் ஜெயிலரையே மீண்டும் திரையரங்கு உரிமையாளர்கள் திரையிட்டனர்.
இப்படி அனைத்து மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 375 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினி கேரியரிலேயே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசியபோது ஜெயிலர் பட வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஜெயிலர் படத்தை பார்த்து உள்ள நிலையில், தற்போது உத்தரபிரதேச முதலமைச்சரும் காண இருப்பதை சிலாகித்து ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.