கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படம் மூலம் பிரபலமான இயக்குநரானார். அந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்தது. டாக்டர் பெற்ற மெகா வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த பீஸ்ட் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து நெல்சன் திலீப்குமாரை பலரும் விமர்சனம் செய்தனர்.
பீஸ்ட் படம் காரணமாக பலரும் நெல்சனை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதனிடையே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போதே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் பீஸ்ட் படுதோல்வியடைந்ததால் ரஜினி படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பறந்தன.
ஆனால் அந்த செய்திகளை பொய்யாக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியானது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஏற்கனவே 60 சதவிகித ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், ரஜினிகாந்த் சிறிது பிரேக் எடுத்துக்கொண்டார். பின்னர் கடந்த வாரம் ஜெய்சல்மரில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதில் அவருடன் ஜாக்கி ஷெராஃப் மற்றும் மோகன்லால் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் மங்களூருவில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்றார். ரஜினிகாந்த் விமான நிலையத்திற்குள் செல்லும் காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை ஏப்ரல் மூன்றாம் வாரத்திற்கும் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதன் பின்னர் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடித்து வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.