இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ஜெயிலர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் பட்டையை கிளப்பியது.
தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஜெயிலர் படம் ஹிட்டடிக்க, ரூ.565 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் ஜெயிலர் திரைப்படம் விக்ரம் படத்தின் சாயலில் இருந்ததாகவும் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்டது.
அதேபோல் ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் வேல்யூ குறைந்ததன் காரணமாக பான் இந்தியா ஹிட்டடிக்க வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு மொழிகளில் இருந்து சூப்பர் ஸ்டார் நடிகர்களை ஜெயிலர் படத்தில் நடிக்க அழைத்தார் ரஜினிகாந்த். அது வொர்க் அவுட்டான நிலையில், வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த் அதே ஃபார்முலாவை கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்பட்டது. அதற்கேற்ப இயக்குநர் நெல்சன் திலீப்குமார் லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்த மிர்ணா, சில தகவல்களை கூறியுள்ளார்.
அதில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இயக்குநர் நெல்சன் சாரிடம் நான் பேசினேன். ஆனால் அந்த படத்தில் எனது கதாபாத்திரம் இருக்குமா என்பது தெரியாது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.