தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. நடிகர் நானியை போல் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து தெலுங்கு சினிமா உலகில் முன்னணியில் இருக்கிறார். யடவே சுப்ரமணியம், பெல்லி சுப்புலு உள்ளிட்ட படங்களில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. ஆனால் 2017ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே ஒரு உலுக்கி உலுக்கிவிட்டது.
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் யாரும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பை விட சிறப்பாக நடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி போட்டு நடித்த கீதா கோவிந்தம் தேசிய அளவில் அவருக்கு ரொமாண்டிக் ஹீரோ பெயரை பெற்றுக் கொடுத்தது. இதனால் மீண்டும் இருவரும் டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடிக்க, அனைத்து மொழிகளிலும் அதிரி புதிரி ஹிட்.
ஆனால் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான World Famous Lover திரைப்படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதன்பின் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான பான் இந்தியா திரைப்படமான ”லைகர்” மோசமான பெயரை பெற்றுக் கொடுத்தது. பாலிவுட்டில் நேரடியாக அறிமுகமான அவருக்கு பெரும் அடியாக அமைந்தது. இந்த தோல்வியின் காரணமாக ஜேஜிஎம் என்ற படத்தின் படப்பிடிப்பையே விஜய் தேவரகொண்டா நிறுத்திவிட்டார்.
இந்த நிலையில் சிவ் நிர்வாணா இயக்கத்தில் குஷி என்ற திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. காஷ்மீர் காதல் கதையான குஷி திரைப்படம் வரும் செப்.1ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கான விளம்பரப் பணகளில் விஜய் தேவரகொண்டா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே சமந்தாவுடன் நெருக்கம் காட்டி வரும் விஜய் தேவரகொண்டா, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் தொடர்ந்து உங்கள் படங்கள் பிளாப் ஆகி வருகிறதே, என்ன காரணம் என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு அவர், இப்போதைய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்தின் கடைசி 6 படங்கள் தோல்வி தான். அவர் ஜெயிலர் மூலமாக கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் தெலுங்கில் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, போலா சங்கர் உட்பட கடைசி 7 படங்கள் தோல்வி தான்.
ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வெற்றிக்காக அதே எனர்ஜியுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்கள். அவர்களின் படங்கள் தோல்வியடைந்தால், யாரும் அவர்களை மரியாதை குறைவாக பேசுவதில்லை. இங்குள்ள அனைவருமே வெற்றி, தோல்விகளை பார்த்து, கடந்து வந்தவர்கள். அதேபோல் நானும் தோல்விகளை கடந்து வெற்றிப் படங்களை கொடுப்பேன். ஆனால் வெற்றி, தோல்வியை கடந்து அனைவருக்கும் மரியாதை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.